வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

 
ச்

கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.


விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை முழு அளவில் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் இரவில் வாகனம் ஓட்டும் கனக ஓட்டுநர்கள் ஓய்வுக்காக அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு அவர்கள் உறங்கும்போது இரண்டு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் அவர்களை எழுப்பி பணம் மற்றும் செல்போனை கேட்கின்றனர். அவர்கள் கொடுக்க மறுத்தால் அவர்களை தாக்குவது, வெட்டுவது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நேற்று இரவு மட்டும் கடலூர் எம் புதூர், ஆணையம் பேட்டை, பெரியப்பட்டு ஆகிய பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு ஓட்டுநர்கள் காயமடைந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதாக ஓட்டுநர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டும் நிலையில் இந்த சாலையில் இரவு நேரத்தில் தனியாக இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் நபர்களையும் மறித்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். லாரி ஓட்டுனர்களை செல்போனை பறிக்கும் பொழுது அதில் ஜீ-பே ஆப் இருந்தால் அதன் பாஸ்வேர்டை கேட்டு அதிலிருந்து பணத்தையும் பறிப்பதாக லாரி ஓட்டுனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 20 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் போன்று இருப்பவர்கள் தான் இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவதாகவும் முழு போதையில் இருக்கும் அவர்களிடம் எதிர்த்து பேசினால் உடனடியாக தாக்குவது வெட்டுவது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவதால் லாரி ஓட்டுனர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்தனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சுற்றிவளைத்துப் பிடிக்கும் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும் போது சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக்கொல்லப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் மீது 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.