சிதம்பரம் அருகே 27 கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு
சிதம்பரம் அருகே தப்பி ஓட முயன்ற பிரபல கொள்ளையனை அண்ணாமலைநகர் போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது வீட்டில் கடந்த 18ஆம் தேதி சுமார் 20 பவுன் நகை திருடு போனது. இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திருடு போனவரின் வீட்டில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தாலுக்கா நல்லியார்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன்(35)என்பவரை நேற்று இரவு சிதம்பரம் மருத்துவக் கல்லூரி சாலையில் அண்ணாமலைநகர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்ட குற்றவாளி அளித்த தகவலின் பேரில் அவர் மறைத்து வைத்திருந்த பொருட்களை எடுப்பதற்காக சிதம்பரம் அருகே சித்தலப்பாடி கிராமத்தில் உள்ள ஒற்றை பனை மரத்திற்கு அருகே போலீசார் கொள்ளையன் ஸ்டீபனை அழைத்துச் சென்றனர். அப்போது குற்றவாளி ஸ்டீபன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணாமலைநகர் தலைமை காவலர் ஞானப்பிரகாசம் என்பவரை கிழித்து விட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தற்காப்புக்காக தனது கைத்துப்பாக்கியால் ஸ்டீபனின் காலில் சுட்டார். இதில் முட்டிக்கு கீழே அவருக்கு குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சுடப்பட்ட கொள்ளையன் ஸ்டீபனையும், காயமடைந்த காவலரையும் அருகிலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு இருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி லாமேக் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட கொள்ளையன் ஸ்டீபன் மீது திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 25 திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


