சென்னையில் 3 மாதத்துக்கு சாலை வெட்டும் பணிக்கு தடை..!

 
1

சென்னை மாநகரில் மாநகராட்சி சார்பில் புதிய சாலைகள் அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மின்துறை, சென்னை குடிநீர் வாரியம், பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு துறைகள் உள்ளிட்ட சேவை துறைகள் சாலைகளை வெட்டி, தங்கள் துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சில நேரங்களில் ஒப்பந்ததாரர்கள் இடையூறு காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, சாலையில் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அப்படியே விடப்படுகிறது. பருவமழை காலத்தில் அதில் நீர் தேங்கி பொதுமக்கள் அதில் விழுந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், இது போன்று சாலைகளை வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் பேருந்துகள் பயணிக்கும் சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளில் பல்வேறு சேவை துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டும் பணிகள் அனைத்தையும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் பருவமழையை ஒட்டி சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 3 மாதங்களுக்கு சென்னையில் சாலை வெட்டும் பணிக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. . குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் உள்ளிட்ட எந்த நிறுவனங்களும் சாலையில் பள்ளம் தோண்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரகால நடவடிக்கைக்காக சாலையில் பள்ளம் தோண்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி சாலையில் பள்ளம் தோண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.