இங்கு யாரும் பெரும்பான்மையோ சிறுபான்மையோ இல்லை- ஆளுநர் ரவி பேச்சு
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வாழ்ந்து வரும் மக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆர்காடு நவாப், மூத்த நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள் வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரை ஆற்றினர். இதைத்தவிர பல்வேறு மொழிகளை தாய்மொழிகளாக கொண்டு தமிழ்நாட்டில் வசித்து வரும் 20 க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்கள் அனைவருக்கு ஆளுநர் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “நாட்டை சிறப்பாக நிர்வகிக்க ஏதுவாக மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த நாளை இன்று கொண்டாடுவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம். தமிழ்நாட்டில் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அனைத்து வகையான மக்களும் வசிக்கின்றனர். இந்தியாவில் 15 மில்லியன் தெலுங்கு பேசும் தெலுங்கு மக்களும் இதே போல் பல்வேறு எண்ணிக்கைகளில் மலையாளம், கன்னடம் என பேசும் மக்களும் வசித்தாலும் இது எப்போதும் ஒரே நாடு.
ஆந்திரா, தெலங்கானா மட்டுமல்ல... உகாதியை இந்த நாடு முழுமையும் தான் கொண்டாடுகிறோம். உகாதியை மட்டுமல்ல. இந்நாட்டின் அனைத்து மொழிகளின் பண்டிகைகளையும் அப்படித்தான் கொண்டாடி வருகிறோம். இங்கு யாரும் பெரும்பான்மையோ சிறுபான்மையோ இல்லை. அனைவருக்கும் பாரதம் ஒரே நாடு. பாரதியின் "செப்புமொழி 18 உடையாள் சிந்தனை ஒன்றுடையாள்" என்ற வார்த்தையின் படி நாம் வாழ்ந்து வருகிறோம்” என்றார்.