பிரிட்டிஷ்காரர்கள் நம்முடைய கல்வி முறையை மாற்றிவிட்டார்கள்! கல்வி முறையில் விரைவில் மாற்றம்- ஆளுநர் ரவி
மத்திய அரசு உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால் அதனை பல்கலைக்கழகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆளுநர் ஆர் என். ரவி கேட்டுக்கொண்டார்.
காட்பாடியில் உள்ள வி.ஐ.டி.பல்கலைக் கழகத்தில் தென்மண்டல துணைவேந்தர்கள் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக சங்கங்களின் அகில இந்திய தலைவர் வினய்குமார் பதக் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கருத்தரங்கை துவக்கி வைத்தார்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சியுடன் கூடிய உயர்கல்விக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கும். நாட்டின் வளர்ச்சிக்கு உயர் கல்வியில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். மாணவர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் கற்பித்தல் மற்றும் கற்றல் முறையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். பல்கலைகழகங்கள் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நம் நாட்டின் வளர்ச்சிக்கு சிறுகுறு தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் அதனை நாம் மேம்படுத்த வேண்டும். இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் மேம்பாடு அடைய வேண்டும் அதற்கான முயற்சியில் பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும்.
அறிவுசார் தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டும். ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முதலிடம் பெற வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத்தை பண்படுத்துவதில் நாம் முதன்மை நாடாக இருக்க வேண்டும். இந்தியாவில் நம் முன்னோர்கள் காலத்தில் குருகுல கல்வி பின்பற்றப்பட்டு வந்தது. அதன் மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இணக்கமான ஒரு சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் கல்வி வளர்ச்சி அடைந்தது மாணவர்களும் அதிக அளவில் கல்வி கற்று வந்தனர். மத்திய அரசு உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால் அதனை பல்கலைக்கழகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரிட்டிஷ்காரர்கள் நம்முடைய கல்வி முறையை மாற்றிவிட்டார்கள். அதை நாம் தற்போது மீட்டெடுக்க வேண்டும். குருகுல கல்வியில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடினார்கள், அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் அறிவை வளர்த்துக் கொண்டார்கள். இந்தியாவில் உள்ள பழைய கல்வி முறையில் மாற்றம் கொண்டு வருவது தான் புதிய கல்விக் கொள்கை” என்று கூறினார்.