அகிம்சை, அகிம்சை என சொல்லிக்கொண்டிருந்ததால்... காந்தியை வம்புக்கு இழுத்த ஆளுநர் ரவி
இந்தியாவிற்கு சொந்தமான 5500 சதுர கிலோமீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இந்திய சீன உறவு-சீனாவின் பார்வையில் இருந்து என்கிற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஒன்றிய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கேஷவ கோகலே மற்றும் சென்னை ஐ.ஐ.டி.இயக்குனர் காமகோடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, “சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக சீனாவும், அதன் எல்லை விரிவாக்க கொள்ளைகையும் இருந்தது. சீனா தொடந்து இந்தியாவின் பகுதியை ஆக்கிரமித்தது, அதன் விளைவாக 5500 சதுர கிலோமீட்டர் பகுதியை சீனா அக்ஷ்யசின் பகுதியில் பிடித்தது. அப்போது இருந்த தலைவர்கள் அகிம்சை பற்றியே பேசிக்கொண்டு இருந்ததால் நாம் மிக பெரிய விலையை கொடுக்க நேரிட்டது. அது மட்டும் இல்லாமல் சீனா- பாகிஸ்தானை நமக்கு எதிராக வளர்க்க ஆரம்பித்து, அது நமது எல்லை மட்டும் இல்லாமல் பல இடங்களில் பிரச்சினையாக மாறியது.
தற்போது 10 ஆண்டுகால புதிய ஆட்சியால் இந்த நிலை மாறி உள்ளது. அட்டல் குகை மற்றும் பல சாலைகள் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் ஆகியவற்றை எல்லை பகுதியில் அமைத்துள்ளோம். அந்த பகுதியில் இதனால் நிலைமை தற்போது மாற்றம் கண்டுள்ளது” என்றார்.