’எங்க அப்பாவ விடுதலை பண்ணுங்க’- கதறி அழுத சிறுவனுக்கு ஆளுநர் ரவி ஆறுதல்

இலங்கை கடற்படையை கண்டித்து, தங்கச்சிமடத்தில் மீனவர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், ராமேஸ்வரம் சென்றுள்ள தமிழக ஆளுநர் ரவி, மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் கடந்த மூன்று நாட்களாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் அடுத்த செம்மமடத்தில் மனநல காப்பகத்தின் புதிய கட்டடம் திறப்பு விழாவிற்காக வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.எஸ்.ரவி, திடீரென தங்கச்சிமடத்தில் மீனவர்கள் நடத்தி வரும் மீனவர்கள் போராட்டத்திற்கு சென்று மீனவர்களிடம் கலந்துரையாடி அவர்கள் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றுக்கொண்டார்.
பின்னர் மத்திய, மாநில அரசுகளிடம் பேசி மீனவரின் பிரச்சனைக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனமீனவர்களிடம் தமிழக ஆளுநர் உத்தரவாதம் கொடுத்தார். இதனை அடுத்து இலங்கை சிறையில் உள்ள தனது தந்தை ஜான்போஸ்யை மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி சிறுவன், தமிழக ஆளுநரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். அச்சிறுவனை, ஆளுநர் ரவி ஆர தழுவி ஆறுதல் கூறினார்.