விஞ்ஞானிகள் வரலாறு படைத்துள்ளனர் - குடியரசு தலைவர், ஆளுநர் வாழ்த்து

நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை தரையிறங்க வைத்த விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சந்திரயான் -2 தோல்விக்கு பிறகு, பல்வேறு மாற்றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தினர். பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த விண்கலம், சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. அதன்பின், நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, அதிலுள்ள சென்சார்கள் மூலம் தரையிறாங்க சரியான சமதள பரப்பு தேர்வு செய்யப்பட்டு, வெற்றிகரமாக தரையிறங்கியது.
இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “நிலவின் தென்துருவ வரலாற்றுபூர்வ சந்திரயான்3 பயணத்தை வெற்றிகரமாக்கிய நமது விஞ்ஞானிகளால் ஒட்டுமொத்த தேசமும் வெளிநாடுவாழ் இந்திய சமூகமும் பெருமிதம் கொள்கின்றன. தலைசிறந்த விண்வெளி நாடுகளின் போட்டிக்குள் இந்தியாவை சேர்த்த இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்துக்கள். இதுதான் தடுக்க முடியா இந்தியா” எனக் கூறியுள்ளார்.
இதேபோல் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, “நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கியதன் மூலம் விஞ்ஞானிகள் வரலாறு படைத்துள்ளனர். ஒட்டுமொத்த இந்தியர்களையும் இஸ்ரோ பெருமைப் படுத்தியுள்ளது. இந்திய விஞ்ஞானிகள் நிலவியல் சார்ந்த கண்ணோட்டத்தையும் மாற்றியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.