“ஒரு நடிகன் அனாதையா போக கூடாது.." மனமுடைந்து பேசிய ஆர்.கே.சுரேஷ்
ஒரு நடிகன் அநாதையாக செல்லக்கூடாது, அதனால் தான் குடும்பத்தின் ஒருத்தனாக நான் வந்துள்ளேன் என நடிகர் ஆர்கே சுரேஷ் கூறியுள்ளார்.

மறைந்த நடிகர் அபிநய்க்கு நடிகர் ஆர்கே சுரேஷ் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாலாவுக்கு ரொம்ப நன்றி அவர் கூட இருந்து பார்த்துக் கொள்கிறார். என்னால் முடிந்தவரை கண்டிப்பாக உதவி செய்வேன். ஒரு நடிகன் அநாதையாக செல்லக்கூடாது, அதனால் தான் குடும்பத்தின் ஒருத்தனாக நான் வந்துள்ளேன். மற்ற நடிகர்கள் சார்பாகவும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு எனக்கு படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருந்தேன். செய்தி கேட்டவுடன் வந்துவிட்டேன். அதேபோல் சில நடிகர்கள் படப்பிடிப்பில் இருப்பார்கள்.. ஆனாலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு உடனடியாக வரவேண்டும். மறைவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வர வேண்டும் சிறிய நடிகர் பெரிய நடிகர் என்பது கிடையாது. இதற்கு வரவில்லை என்றால் வேறு எதற்கு செல்வது? கல்யாணத்திற்கு கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு நிச்சயமாக வர வேண்டும்.
மிகவும் கஷ்டப்பட்டு விட்டான். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும். சங்கத்திலும் இருந்திருக்கிறேன். இன்சூரன்ஸ் இருந்ததால் பல பேரை காப்பாற்றி உள்ளோம். அதேபோல் நடிகர் சங்கத்திலும் இன்சூரன்ஸ் போடாமல் இருந்திருக்கிறார். அபிநய் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. அனைத்தையும் மீறி கடவுள் என்று ஒருவர் இருக்கிறார், நாம் எதையும் தீர்மானிக்க முடியாது. இருந்தாலும் குடிப்பதை நடிகர்களுக்கு இயல்பாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். குடிப்பதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். ஆர்யா உள்ளிட்டவர்கள் எப்போதாவது குடிப்பார்கள். அதேபோல ரோபோ சங்கர் இழப்பு மிகப்பெரிய இழப்பு. முடிந்தவரை நடிகர்கள் தேவையில்லாத போதைப் பொருள்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உயிர் இழந்துவிட்டால் திரும்ப வராது” என்றார்.


