ரிதன்யா தற்கொலை வழக்கு- விசாரணை அதிகாரியை மாற்றக்கோரி தந்தை மனுதாக்கல்

 
ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் சித்ரா தேவி கைது..!!

வரதட்சணை கொடுமையால் திருப்பூர் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றக் கோரி, அவரது தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ரிதன்யா

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது.  கடந்த 2025 ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த அவினாசி டி.எஸ்.பி, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதால், எஸ்.பி. அந்தஸ்து அதிகாரியை புதிய புலன் விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரிக்கக் கோரி, ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை ராமசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால், விசாரணை அதிகாரி முறையாக விசாரிக்கவில்லை எனவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள், மொபைல்கள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிக்காமல், மெத்தனப்போக்குடன் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

வரதட்சணையாக கொடுத்த நகைகள், காரை சட்டப்படி பறிமுதல் செய்யாததால், சட்டரீதியாக இல்லாமல் அவற்றை பெற்றுக் கொள்ளும்படி புலன் விசாரணை நிர்பந்திப்பதாகவும், தனது தரப்பு சாட்சிகளை விசாரிக்காமல், முழுமையான விசாரணை நடத்தாமல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் எஸ்.பி. அந்தஸ்து அதிகாரியை புதிய விசாரணை அதிகாரியாக நியமித்து, விசாரணை நடத்தி, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.