“தெலங்கானாவில் அடுத்த கல்வி ஆண்டு முதல் காலை உணவுத் திட்டம்"- ரேவந்த் ரெட்டி
தெலங்கானாவில் தமிழ்நாட்டின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் 2025-26ஆம் ஆண்டுக்கான புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் புதிதாக 2.65 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “காலை உணவு, புதுமைப்பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் தெலங்கானாவில் செயல்படுத்தப்படும். அடுத்த கல்வியாண்டிலிருந்து தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன். தமிழ்நாட்டில் கல்வி வளர அடித்தளம் அமைத்தவர் காமராஜ், கலைஞர் கருணாநிதியின் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

கல்வியிலும், விளையாட்டிலும் தமிழகம் சிறந்த மாநிலமாகிறது. தமிழ் மக்களும் தெலுங்கு மக்களும் நூற்றாண்டு காலங்கள் நட்புறவு கொண்டவர்கள். இந்தியர்கள் அனைவரும் தமிழகத்தின் கல்வி கொள்கைகளை உற்று நோக்குகின்றனர். நாட்டின் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அவரை மீண்டும் வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டின் கல்வி கொள்கை பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தெலங்கானாவில் கல்வித் துறையை கவனித்து வருகிறேன். தமிழகத்தில் உள்ள கல்வித் திட்டம் தெலங்கானாவில் வரும் கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும். தெலங்கானாவிலும் விளையாட்டு அகாடமியை ஏற்படுத்த உள்ளோம்” என்றார்.

