கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு..!

 
1

கள்ளக்குறிச்சி  விஷ சாராய சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டு இருந்தார். மேலும் இந்த ஆணையம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும் என தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. 

முதற்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த், எஸ்.பி., வருவாய் அலுவலர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். 

நீதிபதி கோகுல்தாஸ் உடன் மாவட்ட கலெக்டர் பிரசாந்த், வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் முன்னதாக தனித்தனியாக விசாரணை நடத்தினார். விஷச் சாராயம் தொடர்பாக கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று நீதிபதி கோகுல்தாஸ் விசாரணை நடத்தினார். 

அதனை தொடர்ந்து உயிரிழப்பு தொடர்பாக 4 விதமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி கோகுல்தாஸ் தெரிவித்துள்ளார்.