குற்றாலம் ஐந்தருவியில் 15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

 
குற்றாலம் ஐந்தருவியில் 15 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த பெருமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்  காரணமாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஒரு வார இடைவெளிக்கு பின் நேற்று  குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது இதனால் பாதுகாப்பு கருதி மீண்டும் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இன்று காலை தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து ஐந்தருவி மற்றும் புலி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே ஐந்தருவிக்கு வந்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் குளிக்க அனுமதி கிடைத்ததும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பழைய குற்றால அருவியில் இன்னும் தடை நீடிக்கிறது மெயின் அருவியில் தரைத்தளம் பராமரிப்பு பணிகள் காரணமாக அங்கு யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் குற்றாலம் ஐந்தருவியில் 15 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. பாம்பை கண்டதும் சுற்றுலா பயணிகள் சத்தமிடவே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்புத்துறையினர் 15 அடி நீள பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.