பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட மீனவ கிராம பிரதிநிதிகள் எதிர்ப்பு
புதிய தலைமைச் செயலகமா? மீனவர்களா? என்றால் மீனவர்கள் பக்கம்தான் முதல்வர் விஜய் நிற்பார் என்று அமைச்சர் ஒருவர் கூறினார். ஆனால், தற்போது நடப்பதைப் பார்த்தால் எந்த நம்பிக்கையும் வரவில்லை என பட்டினப்பாக்கம் மீனவ கிராம பிரதிநிதிகள் பேட்டியளித்துள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே அப்பகுதி மீனவ மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மீனவர்களுக்குக் குடியிருப்புகள் கட்ட வேண்டிய இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதா என்று கேள்வி எழுப்பிக் கருப்புக்கொடி ஏந்திப் போராடியிருக்கின்றனர். இவ்வளவு எதிர்ப்பிற்குப் பிறகும், அங்கேயே புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டியே தீருவோம் எனத் தவெக அரசு பிடிவாதம் காட்டுகிறார். பட்டினப்பாக்கம் முதல் நொச்சிக்குப்பம் வரையுள்ள 12 மீனவ கிராமங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பட்டினப்பாக்கம் மீனவ கிராம பிரதிநிதிகள், "புதிய தலைமைச் செயலகமா? மீனவர்களா? என்றால் மீனவர்கள் பக்கம்தான் முதல்வர் விஜய் நிற்பார் என்று அமைச்சர் ஒருவர் கூறினார். ஆனால், தற்போது நடப்பதைப் பார்த்தால் எந்த நம்பிக்கையும் வரவில்லை.
தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான வெங்கடரமணனின் பேச்சு தேர்தலுக்கு முன்பு ஒரு மாதிரியாகவும், தேர்தலுக்கு பின்னர் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. பட்டினப்பாக்கத்தில் மீனவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தவெக வாக்குறுதி அளித்திருந்தது. பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எந்த வித ஆய்வும் நடத்தாமல் தலைமை செயலகம் காட்டுவதாக அறிவித்தது ஏன்?" என்றனர்.
-

