அஜித்குமார் குடும்பத்தினருக்கு கருவேலம் காட்டில் நிவாரண நிலம்- வருவாய் அலுவலர் ஆய்வு
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீசார் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இடம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி இன்று ஆய்வு செய்தார்.

நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித்குமார்(27) , போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில் வைத்து போலீஸார், அஜித்தை தாக்கும் வீடியோ காண்போரை கலங்கச் செய்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அஜித்குமார் தாயார் மாலதிக்கு அமைச்சர் பெரியகருப்பன் ஏனாதியில் மூன்று சென்ட் நிலமும், சகோதரர் நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அரசு பணி ஆணையும் வழங்கினார்.

இந்நிலையில் நிவாரணமாக கொடுக்கப்பட்ட 3 சென்ட் நிலம் 5 கி.மீட்டர் தொலைவில் கருவேலம் காட்டிற்குள் கொடுக்கப்பட்டுள்ள நிலம். ஆகவே யாருக்கும் பயன்படாத இடம் என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இன்று மதுரை ஐகோர்ட்டில் வீட்டு மனை வீட்டில் இருந்து ஆறு கி.மீ தள்ளி கருவேல மர காட்டினுள் இருப்பதாகவும், 62 கி.மீ தள்ளி காரைக்குடியில் பணி வழங்கி இருப்பதாகவும் அஜித் குமார் தரப்பில் குற்றம் சாட்டினர். இதனையடுத்து இடம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி இன்று, தாசில்தார் விஜயகுமாருடன் ஆய்வு மேற்கொண்டார். இடத்தின் தற்போதைய மதிப்பு, காட்டினுள் அமைந்துள்ளதா என பார்வையிட்டார்.


