திருப்பூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி - ஓபிஎஸ் வலியுறுத்தல்

 
ops

திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், வறட்சி, நில அதிர்வு, நிலச்சரிவு, சுனாமி ஆகியவை ஏற்படும்போது பொதுமக்களுக்கும், விவசாய பெருங்குடி மக்களுக்கும் தேவையான உணவு, உடை, உறைவிடம், அத்தியாவசியப் பொருட்கள், நிதியுதவி, மறுவாழ்வு போன்ற உதவிகளை உடனடியாக அளிக்க வேண்டிய தலையாய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு. ஆனால், கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இழப்பீடு வழங்குவதில் மெத்தனப்போக்கு காணப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கனமழை மற்றும் சூறாவளி காரணமாக திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் உள்ள அசநல்லிபாளையம், கருமாபாளையம், சேவூர், நடுவச்சேரி, சின்னேரிபாளையம், கன்னடாங்குளம் ஆகிய கிராமங்களில் அறுவடைக்கு தயாராயிருந்த 15,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ops

இதேபோன்று, பொங்கலூர் ஒன்றியம், வேலம்பட்டி, புதுப்பாளையம், ஆண்டிபாளையம், அழகுமலை, கிருஷ்ணாபுரம், வேலாயுதம்பாளையம், கோவில்பாளையம், தொங்குடிபாளையம், தேவணம்பாளையம், ராமன்பாளையம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்களும், தென்னை மரங்களும், பப்பாளி மரங்களும், மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்களும் பலத்த சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதற்கு ஒரு வாரம் முன்பு உடுமலையை அடுத்த குமரலிங்கம் அருகே சாமராயப்பட்டி, பாப்பான்குளம், கிளுவங்காட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் சூறாவளிக் காற்றின் காரணமாக, அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்ததாகவும், மாட்டு கொட்டகைகள் மற்றும் வீடுகள் பலத்த சேதம் அடைந்ததாகவும், சாமராயப்பட்டி கிராமத்தில் உள்ள கோழிப் பண்ணை வெகுவாக பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 5,000 கோழிகள் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

rain

மேற்படி இரண்டு சம்பவங்களிலும், பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து, மின் கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தாழ்வான நிலையில் இருக்கின்ற மின் கம்பிகளை நன்கு உயர்த்திவிட்டு மின் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும், இல்லையெனில், உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமல்லாமல், பயிர்களுக்கான உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவி வழங்கப்பட வேண்டுமென்றும் தமிழக விவசாய சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Ops
சேதமடைந்த பகுதிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றாலும், அவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்து அதன் அடிப்படையில் இழப்பீடு மற்றும் நிவாரண உதவியை வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து அரசின்கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் விவசாயிகள் சங்கம் நடத்தியுள்ளது. இருப்பினும், அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை.பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அண்மையில் திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கவும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், உயிரிழப்புகளைத் தவிர்க்க தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்திடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.