நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை - தவறான முடிவு என காங்கிரஸ் கருத்து

 
congress

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்தவர்கள்  பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பையர்ஸ் ஆகிய 7 பேரும். இவர்களில் பேரறிவாளனை , கடந்த மே மாதம் 18ஆம் தேதி  உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி  விடுதலை செய்தது.  பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மீதமுள்ள ஆறு பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது.   அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி  மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும்  தங்களை விடுதலை செய்யக்கோரி தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

supreme court

அதில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி தங்களையும் விடுதலை செய்ய  வேண்டும் என்று கோரியிருந்தனர்.  இந்த வழக்கை கடந்த 3 மாதங்களாக  நீதிபதி டி.ஆர்.கவாய் , நாகரத்னா அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  முருகன், சாந்தன்,  நளினி,  ரவிச்சந்திரன்,  ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பையர்ஸ் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறான முடிவு. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.