இந்தியா - வங்கதேசம் இடையே உறவில் விரிசல்: இந்தியர்களுக்கு விசா வழங்க வங்கதேசம் திடீர் தடை!

 
1 1

வங்கதேசத்தில் நிலவி வரும் கடும் வன்முறை மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை வங்கதேச அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதலின் வெளிப்பாடாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 18-ம் தேதி வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 35 நாட்களில் மட்டும் 11 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; அவர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவில் பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த விவகாரம் விளையாட்டுத் துறையிலும் எதிரொலித்துள்ளது. ஐபிஎல் தொடரில் (IPL) கொல்கத்தா அணியில் ஒப்பந்தமாகியிருந்த வங்கதேச வீரர் முஷ்தபிஜூர் ரகுமான், இந்துக்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடப் போவதில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால், டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை, அகர்தலா மற்றும் கவுகாத்தி ஆகிய நகரங்களில் உள்ள வங்கதேச தூதரகங்களில் விசா வழங்கும் பணிகள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், "உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி, வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களைத் தவிர்த்து, சுற்றுலா உள்ளிட்ட இதர விசாக்கள் வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.

 வங்கதேச தூதரகத்தின் இந்த முடிவால், சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பயணங்களுக்காக வங்கதேசம் செல்லத் திட்டமிட்டிருந்த இந்தியர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே டிசம்பர் 20-ம் தேதி முதல் டெல்லியில் விசா பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது அனைத்து தூதரகங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.