‘மின் இணைப்பு வழங்கக் கோரிய ராஜேஸ் தாஸ் மனு தள்ளுபடி’- ஐகோர்ட் அதிரடி

 
rajesh doss

மின் இணைப்பு துண்டிக்கபட்டதற்கு எதிராக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து  உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸும், பீலா வெங்கடேஷனும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் வாங்கிய பங்களா வீடு தற்போது இருவரும் பிரிந்ததால் பீலா வெங்கடேஷ் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ராஜேஷ் தாஸ் கடந்த 18-ந்தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார். மேலும், தனது பெயரில் உள்ள தையூர் பங்களா வீட்டின் மின் இணைப்பை துண்டிக்குமாறு செங்கல்பட்டு மின்வாரிய பொறியாளருக்கு பீலா வெங்கடேசன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தையூர் பங்களாவிற்கு மின் இணைப்பு துண்டிக்கபட்டது.

இதனை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தவழக்குத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது பீலா வெங்கடேசன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, வீட்டின் மின்சாரம் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுவிட்டதால் இந்த மனு செல்லத்தக்கது அல்ல எனவும் பீலா வெங்கடேசன் பெயரில் மின் இணைப்பு உள்ளதால் அதனை தற்காலிகமாக துண்டிக்குமாறு கோரிக்கை வைப்பதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளதாக தெரிவித்தார். மேலும், ராஜேஷ் தாஸ்க்கு சொந்தமாக நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடும், பல இடங்களில் லாட்ஜ்கள் உள்ளதால் அவர் அங்கேயே தங்கி கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார். ராஜேஸ்தாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், வீட்டுக் கடனை தான் செலுத்திவரு வதாகவும், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதனையடுத்து, வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அனிதாசுமந்த், வசிப்பிடம் குறித்து இந்த நீதிமன்றத்தில் தீர்மானிக்க முடியாது சம்பந்தப்பட்ட நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என்றும், இருவரும் சமரசமையத்தை அணுகுமாறு நிர்பந்திக்க முடியாது எனக்கூறி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.