பட்டாசு தொழிற்சாலைக்கு கட்டுப்பாடு.. தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் போட்ட உத்தரவு..
பட்டாசு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அரசின் கருத்துகள் என்ன என்பது குறித்து அறிக்கை தக்கல் செய்ய தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு காலகட்டங்களில் விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட ஊர்களில் நடந்த பட்டாசு தொழிற்சாலை தீ விபத்து குறித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்தவகையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயனா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் ஆகியோர் அமர்வில் , இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க உலகளவில் பின்பற்றப்படும் தொழிநுட்பங்கள் மற்றும் விபத்தை தடுப்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், பட்டாசு தொழிற்சாலை மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாய காப்பீடு மற்றும் காப்பீடு இருந்தால் மட்டுமே பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்குதல் போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அரசின் கருத்து என்ன என கேட்டனர். மேலும், விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.