மருத்துவ ஜாமினில் வந்து ரீல்ஸா? - சவுக்கு சங்கர் மீதான ஜாமின் நிபந்தனைகளைத் தளர்த்த நீதிமன்றம் மறுப்பு..!
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட, 'யு டியூபர்' சவுக்கு சங்கருக்கு, மூன்று மாதங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிச., 27ல் உத்தரவிட்டது. இந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரித்து ஜாமினை ரத்து செய்ய மறுத்தது.இருப்பினும், சில கடுமையான நிபந்தனைகளை விதித்தனர்.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து, சமூக ஊடகங்களில் எவ்வித கருத்தையும் தெரிவிக்கக் கூடாது.சாட்சிகள், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளக் கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால், நீதிமன்றம் தீவிரமாக கருதும்; ஜாமின் ரத்து செய்யப்படும்.சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டீன், குழு அமைத்து, சவுக்கு சங்கரின் உடல் நிலையை ஆய்வு செய்வதுடன், அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்து இருந்தது.
இந்த நிபந்தனைகளை தளர்த்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார். இந்த மனுவானது நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் சதீஷ்சந்திர ஷர்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஷர்மா கூறியதாவது: மனுதாரர் ஒவ்வொரு வாரமும் நம் முன் வருகிறார். அவரது லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் லேப்டாப்பை விடுவிக்கக்கோரி, மாஜிஸ்திரேட் முன்பு மனு தாக்கல் செய்யவில்லை. அவர் உச்சநீதிமன்றம் வந்துள்ளார். அவரது போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்வந்துள்ளார். இது போன்றவற்றுக்காக வந்துள்ளார் எனத் தெரிவித்தார்.நீதிபதி தத்தா, சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜியிடம், மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.இதற்கு விளக்கமளித்த பாலாஜி, சவுக்கு சங்கருக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்கப்படவில்லை எனக்கூறியதுடன், சங்கரை மட்டும் மாநில போலீசார் குறிவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் விமர்சித்ததை விளக்கினார்.
மேலும், சவுக்கு சங்கர் காய்ச்சல் எனக் கூறியதும், அவருக்கு இசிஜி பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவருக்கு இதய பிரச்னை உள்ளதை அறிந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்ப பரிந்துரை செய்தனர். ஆனால், 20 நிமிடங்களில், திடீரென தங்களது எண்ணத்தை மாற்றி அவர் நலமாக உள்ளதாக தெரிவித்தனர் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி தத்தா கூறுகையில், சங்கருக்கு மருத்துவ அடிப்படையில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அவர் ஜாமினில் வெளியே வந்ததும், வெளிநோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு ரீல்ஸ் மற்றும் வீடியோ எடுத்து யுடியூபில் பதிவேற்றம் செய்ய துவங்கினீர்கள். ஜாமின் வழங்கியதற்கான காரணம் அது இல்லை. நீங்கள், உங்கள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறீர்கள். இதனை உயர்நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. உங்கள் ஜாமின் ரத்து செய்யப்படவில்லை. ஆனால், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேசக்கூடாது எனக்கூறியுள்ளது. ஆனால், அதனை செய்கிறீர்கள் என்றார்.தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, விசாரணைக்கு அவரது மொபைல்போன் தேவைப்படுகிறது. அதனை அவர் ஒப்படைக்கவில்லை. ஜாமினில் வெளியே வந்த உடன் மொபைல்போனை காட்டி வீடியோ எடுக்கிறார்கள். ஜாமினில் வெளியே வந்ததும் மருத்துவமனைக்கு செல்லவில்லை. அதற்காக தான் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சர்மா, ' அவர் ரீல்ஸ் எடுப்பதில் 'பிசி' ஆக இருக்கிறார்,' எனக்குறிப்பிட்டார்.பாலாஜி:டாக்டர் முன்பு தனது கருத்தை மாற்றிக் கொண்டதை போன்று மீண்டும் அதுபோன்று நடந்துவிடுமோ என்ற அச்சம் சங்கருக்கு உள்ளது. ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு செல்வதற்கு ஆட்சேபம் உள்ளது என்றார்.இதற்கு நீதிபதி தத்தா' இது மிகவும் அதிகம். உங்களால் எப்படி டாக்டர்களை அவமதிக்க முடியும். நீங்கள் இந்த மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என்று சொல்கிறீர்கள். அப்படியானால், எந்த டாக்டர்கள் குழுவிடம் செல்வது என்பதை நீங்களே முடிவு செய்வீர்களா எனக்கூறியதுடன் ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த மறுத்துவிட்டனர்.


