ஆவினில் 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைப்பு- பால் முகவர்கள் குற்றச்சாட்டு

 
பச்சை நிற 5 லிட்டர் பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிப்பு - ஆவின் நிறுவனம் மறுப்பு..

ஆவினில் 4 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ள நிலையில், உண்மையை பால்வளத்துறை அமைச்சர் மறைக்கிறார் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

Image

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க தலைவர் சு.ஆ பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆவினுக்கான பால் கொள்முதல் கடந்த சில வாரங்களாக குறைந்து கொண்டே போவதால் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பால் முகவர்களுக்கு 5% முதல் 20% வரை ஆவின் பால் பாக்கெட்டுகள் எண்ணிக்கை குறைக்கப்படுவதாகவும், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் உபபொருட்கள் தட்டுப்பாடாக வழங்குவதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (30.08.2023) செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் பால் கொள்முதல் குறையவில்லை என்றும், ஆவினுக்கான பால் கொள்முதல் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் தெரிவித்துள்ளதோடு, பால் முகவர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பால் முகவர்கள் தனியாருக்கு ஆதரவாக ஆவினுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்து, தனியார் பால் நிறுவனங்களின் கைக்கூலியாக செயல்படுவதாக கூறி முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவடி சா.மு.நாசர் ஆகியோரது வரிசையில் தற்போது மனோ தங்கராஜ் அவர்களும் சேர்ந்திருப்பது உள்ளபடியே வருத்தமளிக்கிறது.

இந்த தருணத்தில் ஆவினுக்கான பால் கொள்முதல் 32லட்சத்தில் இருந்து 28லட்சம் லிட்டராக குறைந்து சுமார் 4 லட்சம் லிட்டருக்கும் மேல் தினசரி பால் கொள்முதல் குறைந்துள்ளது என்பதற்கான ஆதாரமாக ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. வினித் ஐஏஎஸ் அவர்கள் கடந்த 21.08.2023 அன்று 27 மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கு பால் கொள்முதல் குறைந்துள்ளது தொடர்பாக எழுதிய கடிதத்தை மரியாதைக்குரிய பால்வளத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களுக்கு இந்த அறிக்கை மூலம் சமர்ப்பிக்கிறோம்.

ஆவின் பால் விலை

மேலும் கடந்த மே 11ம் தேதி பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட அன்றைய தினம் அமைச்சர் தரப்பில் இருந்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிர்வாகிகளை நேரில் அழைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியதையும், அதனைத் தொடர்ந்து ஆவினில் நடைபெற்று கொண்டிருக்கும் ஊழல், முறைகேடுகள் குறித்த விபரங்களை தனது உதவியாளரிடம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அன்றைய மறுநாள் அவரது முதுநிலை உதவியாளர் திரு. செந்தில்வேல் அவர்களை நேரில் சந்தித்து சுமார் 200பக்கங்களுக்கு மேலான ஆவணங்களை வழங்கினோம்.

அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ஆவினில் ஊழல், முறைகேடுகளில் தொடர்புடைய சுமார் 16அதிகாரிகள் குறித்த பட்டியலையும், ஜூன் 22ம் தேதி நேரில் சந்தித்து ஆவினை சுரண்டிக் கொண்டிருக்கும் மொத்த விநியோகஸ்தர்கள் குறித்த பட்டியலையும் வழங்கியதோடு, தமிழகம் முழுவதும் ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க, ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமானால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும், அதே சமயம் ஆவினுக்கு ஏற்படும் நிதியிழப்பை சரி செய்ய ஆவின் பால் விற்பனை விலையை எவ்வளவு மாற்றி அமைக்கலாம் என்பது குறித்த பரிந்துரை கடிதத்தையும் வழங்கி வந்தோம். அதுதருணம் விரைவிலேயே தமிழக முதல்வருடன் கலந்து பேசிட ஏற்பாடு செய்கிறேன் என கூறியதையும் இந்த தருணத்தில் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும், அமைச்சர் அழைப்பின் பேரில் நேரில் சந்தித்த எங்களை சந்தித்து சந்திப்பின் விவரம் கேட்டிட முற்பட்ட ஊடகவியலாளர் நண்பர்களிடம், அமைச்சரை சந்தித்து விட்டு வந்துள்ளதால், அவருடன் கலந்துரையாடிய மற்றும் அளித்த கடித விவரங்களை உடனடியாக வெளியிட முடியாத நிலையில் இருக்கிறோம் என்று கூறியதை ஊடக அன்பர்கள் நன்றாக அறிவார்கள்.

ஆவின் பால்

திரு. மனோ தங்கராஜ் அவர்கள் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எடுத்து வந்த ஒரு சில நடவடிக்கைகளால் ஆவினில் மாற்றம் வரும் என நம்பியிருந்த நிலையில் மூன்று மாதங்கள் கடந்தும் ஆவினில் மாற்றம் வரக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படாமல் ஊழல் அதிகாரிகள் காப்பாற்றப்படும் வகையில் மேலிடத்து உத்தரவு எனக் கூறி பணியிட மாற்றம் செய்து வருவதால் வேறு வழியின்றி உண்மையை ஊடகங்கள் வாயிலாக வெளியிட வேண்டிய சூழலுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தள்ளப்பட்டது.

ஆனால், உண்மையை ஜீரணித்துக் கொள்ள முடியாததால் ராஜேந்திர பாலாஜி, ஆவடி சா.மு.நாசர் ஆகியோரையே மிஞ்சும் வகையில் எங்களிடமிருந்து ஊழல், முறைகேடுகள் செய்த அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான தரவுகளை பெற்றுக் கொண்டு நாங்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசுவதாகவும், எங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நடவடிக்கைகளை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தவறாக விமர்சிப்பது உள்ளபடியே வேதனையளித்தாலும் பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் நலனிற்காக ஆவின் நிர்வாகம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதால் அங்கு நடைபெறும் தவறுகளை, உண்மையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டும் என்பதையும், உண்மையை உலகறிய செய்ய சட்டரீதியான நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு சந்திக்கத் தயார் என்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.