இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது ஃபெங்கல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

 
rain

ஃபெங்கல் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,  நேற்று (29-11-2024) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நாகபட்டினத்திலிருந்து சுமார் கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற்றது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக - புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று பிற்பகலில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

rain


 
இதன் காரணமாக இன்று  தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.