மயிலாடுதுறை டிஎஸ்பியை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை!
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்ட சுந்தரேசன், விதிகளை மீறி செயல்பட்டதாக இதுவரை 23 பார்களை மூடி சீல் வைத்துள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 1200க்கும் கூடுதலான வழக்குகளை பதிவு செய்திருக்கும் சுந்தரேசன் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறைகளிலும் அடைத்துள்ளார். இந்நிலையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட வாகனத்தை பறித்து, வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து செல்லும் நிலையை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உயரதிகாரிகள், ஆளும்கட்சி நிர்வாகிகளின் பரிந்துரையையும் மீறி மது வணிகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் அதற்கு பழிவாங்கும் வகையில் தான் அவர் மீது இத்தகைய பழிவாங்கல்களை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தன்னுடைய வாகனத்தை எஸ்பி அலுவலகத்தினர் வாங்கிக்கொண்டதாக மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டியளித்து இருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் இன்று காலை மயிலாடுதுறை எஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


