"திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற தயார்"- மாவட்ட ஆட்சியர்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் தடுக்கவே தடை உத்தரவு போடப்பட்டதா என மாவட்ட ஆட்சியரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மதுரை ஐ.ஏ.எஸ் அதிகாரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தனர். பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதாகத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், பக்தர்களின் மத உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மாலை 4 மணிக்கு ஒத்திவைத்தனர்.
பின்னர் விசாரணை தொடங்கியவுடன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கடுமையாக இருக்கும். பக்தர்களின் மத உரிமையை பாதுகாக்க வேண்டும் என அறிவிறுத்திய நீதிபதிகள், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது அரசு தரப்பில் கோயிலில் வழிபாடு நடத்துவதை நாங்கள் தடை செய்யவில்லை; மக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் மட்டுமே 258 நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உடனே குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று மலை உச்சித் தூணில் விளக்கு ஏற்றப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்பதற்காக சீராய்வு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக பல உத்தரவுகளில் கூறியுள்ளது, நீதிமன்ற உத்தரவுக்கு முரணான ஆலோசனைகளை வேறு எந்த அதிகாரியிடம் இருந்து வழங்கப்பட்டாலும் மாவட்ட ஆட்சியர் அவற்றை புறக்கணிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை காரணமாகக் கூறி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க முடியாது. சம்மந்தப்பட்ட அதிகரிகள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய கடமை கொண்டவர்கள். ஆகவே திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றத் தயாராக இருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

