அதிமுக- திமுக இணைந்து வந்தாலும் ஏற்க தயார்: ஆளுநர்
ஆட்சி அமைக்க அதிமுக- திமுக இணைந்து வந்தாலும் பெரும்பான்மை இருந்தால் ஏற்க தயார் என ஆளுநர் கூறியுள்ளார்.
![]()
தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து, விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரை இன்று மீண்டும் சந்தித்தார். சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காட்டவில்லை அதனால் அவரை ஆட்சி அமைக்க அழைக்க முடியவில்லை என தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தது.
இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பாக முதலமைச்சராக விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தால் குதிரை பேரும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் தான் விஜய் ஆட்சி அமைக்க அழைக்கவில்லையே தவிர வேறு எந்த காரணமும் இல்லை திமுக - அதிமுக இணைந்து வந்து, தங்கள் பெரும்பான்மையை நிரூபித்தால், அவர்களுக்கு பதவியேற்பு விழா நடத்த தயார், யார் பெரும்பான்மை நிரூபித்தாலும் அவர்கள் ஆட்சி அமைக்கலாம்” என்றும் கூறியுள்ளார்.

