தீபாவளி கொண்டாடும் முன் இதை படிங்க! ரெயில்வே துறை வெளியிட்ட எச்சரிக்கை பதிவு..!!
தமிழகம் முழுவதும் வருகிற 8-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் பட்டாசுகள் வாங்கி தீபாவளி கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பது மிகவும் ஆபத்தானது. பட்டாசுகளில் இருந்து சிதறும் தீப்பொறிகள், அந்த வழியாகச் செல்லும் ரெயில்களில் எளிதில் தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை ரெயில் ஓட்டுநர்களின் (லோகோ பைலட்டுகள்) பார்வையை மறைக்கலாம். இதனால் ரெயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு, பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, பொதுமக்கள் ரெயில்வே பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். ரெயில் தண்டவாளங்கள் மற்றும் ரெயில்வேக்கு சொந்தமான பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான திறந்தவெளிகளில் மட்டுமே பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

