பொங்கல் பரிசோடு பணம் வராதது ஏன்?- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

 
rb udhayakumar

தமிழகத்தில் அம்மா உணவகம் தங்கு தடையின்றி செயல்படும் என தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பதை தமிழகமே வரவேற்கிறது, அதற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் சமூக சேவகர் நெல்லை பாலு என்பவர் நடத்தி வரும் அட்சய பாத்திரம் என்ற அமைப்பின் மூலம் சாலையோரத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து 250 வது நாளாக இலவசமாக உணவு வழங்கும் நிகழ்வு ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், “தமிழகத்தில் கொரோனா தொற்று  கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு தொற்றை  தடுப்பதற்கு அதி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை  தமிழக அரசு வழங்க வேண்டும். தொற்று பாதித்தவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் வாங்கி கொடுப்பதற்கு உதவியாளர்கள் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டார்கள். கடந்த காலங்களில்  அம்மா உணவகம் மூலமாக உணவு வழங்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசோடு சேர்த்து ரொக்க பணமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போதைய திமுக அரசில் பொங்கல்  பரிசாக ரொக்க பணம் ஏன் வழங்கவில்லை.

தற்போது ஆளுநர் உரையில் அம்மா உணவும் தொடர்ந்து செயல்படும் என்று முதல்வர் தெரிவித்திருப்பதை ஒட்டுமொத்த தமிழகமும் வரவேற்கிறது. நாங்களும் வரவேற்கிறோம், இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மதுரையில் கொரோனா பாதித்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்திருப்பது வேதனை அளிக்கிறது” என தெரிவித்தார்.