"வி.எஸ்.பாபுவின் உடலை காலணி அணியாமல் முதல்வர் விஜய் சுமந்து சென்றது வேஷம்"- ஆர். பி. உதயகுமார்
எடப்பாடியார்தான் முதல்வர், நீங்கள்தான் அமைச்சர் எனப் போகிற இடமெல்லாம் சொன்னதைக் கேட்டு நம்பிக்கையுடன் இருந்தேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "எடப்பாடியார்தான் முதல்வர், நீங்கள்தான் அமைச்சர் எனப் போகிற இடமெல்லாம் சொன்னதைக் கேட்டு நம்பிக்கையுடன் இருந்தேன். சாமான்யர்களான எங்கள் வாயில் விழுந்ததால்தான்.. ஆதவ் அர்ஜூனா வாழ்க்கை டைவர்சில் முடிந்தது. தவெக அரசின் ஆயுள் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் தவெக ஆட்சி வீட்டுக்கு போகலாம். பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. விலைவாசி உயர்வை குறைக்க முதல்வருக்கு தெரியவில்லை. போதைப் பொருளை கட்டுப்படுத்தவில்லை.
வி.எஸ்.பாபுவின் உடலை காலணி அணியாமல் முதல்வர் விஜய் சுமந்து சென்றது வேஷம் அல்ல பாசம். வி.எஸ்.பாபுவுக்கு காட்டிய அதே அக்கறை, மரியாதை கரூரில் இறந்த 41 பேருக்கும் கிடைத்திருந்தால் விஜய் ஒருவேளை இறைவனுக்கு நிகராக போற்றப்பட்டிருப்பாரோ என விவாதிக்கப்படுகிறது. கரூரில் 41 பேர் இறந்தபோது, அவர்களின் முகத்தைக்கூட பார்க்காமல் 72 நாட்கள் வீட்டில் இருந்த விஜய், மனிதநேய அணுகுமுறையை அனைவரிடமும் கடைபிடிக்க வேண்டும். இது விமர்சனமல்ல, எதிர்பார்ப்பு" என்றார்.

