பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து நாளை மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

 
eps

எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேட்டியளித்துள்ளார்.

eps
மதுரை விமானநிலைய சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களும், அதிமுக மாவட்ட கழக செயலாளர்களுமான செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் மதுரை கோரிப்பாளையம் கட்சி அலுவலகத்தில் வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மூன்று மாவட்ட கழக செயலாளர்களும் அவசர அவசியம் கருதி செய்தியாளர்களை அழைத்துள்ளோம். சிவகங்கை மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளால் பங்கேற்க எடப்பாடி பழனிச்சாமி மீது நேற்றைய தினம் மதுரை வந்தார். விமானநிலையம் உள்ளே இருந்து பேருந்தில் வெளியே வரும் போது மோசமான கிரிமினல் ஒருவர் எடப்பாடியை பற்றி அசிங்கமாக மோசமாக பேசினார். அதையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அமைதியாகவே வந்தார். தொடர்ந்து அவர் கூச்சல் போட்ட போதும் எடப்பாடி பழனிச்சாமி அமைதியாகவே இருந்தார்.

விமானநிலையத்திற்குள் உள்ளே நடந்த சம்பவம் குறித்து எங்களுக்கே தெரியாது. ஒரு எதிர்க்கட்சித்தலைவரை, மக்கள் செல்வாக்கை பெற்றவரை திட்டமிட்டு வழக்கில் சேர்த்து பொய்யான குற்றச்சாட்டை காவல்துறை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் துணிச்சலாக இந்த வழக்கை போட்டுள்ளனர். இரவு நேரத்தில் ஜோடிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

eps

ஒரு முன்னாள் முதலமைச்சர் மீது போட்டுள்ள வழக்கை படித்தால் மனமே பதறுகிறது. இந்த அரசாங்கத்தின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கால் தெரிகிறது. எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிமுகவினர் மீது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் தெய்வத்தை வணங்க வந்தபோது விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அரசாங்கம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். நாங்கள் சொன்னதால் அதிமுகவினர் அமைதியாக உள்ளனர். ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து பழங்காநத்தம் பகுதியில் உள்ள  ஜெயம் தியேட்டர் அருகில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.ப்அதிமுக வழக்கறிஞர்கள் குழு கவர்னர், உள்துறை செயலாளருக்கு, டிஜிபிக்கு, தென்மண்டல ஐஜிக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம். எதிர்க்கட்சித்தலைவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக காவல்துறை உள்ளது.

அதிமுகவினர் தாக்கிய காட்சிகள் குறித்து எங்களுக்கு தெரியாது. எங்கள் எல்லைக்குள் நடந்ததால் கொந்தளிப்போடு பேசுகிறோம். எல்லா மக்களாலும் நேசிக்கப்படும் தலைவர் எடப்பாடி அவர் மீது காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு தொடுத்துள்ளனர்.  அந்த நபர் தரக்குறைவாக நடந்த போதும், எடப்பாடி பழனிச்சாமி கண்ணியக்குறைவாக நடக்கவில்லை. மாசற்ற தங்கமாக எடப்பாடி பழனிச்சாமி சம்பவம் நடந்த போது இருந்தார்.

குற்றவாளி கொடுத்த புகாரை வைத்து வழக்குப்போடுவதை பார்த்தால் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு போகியுள்ளது என்பது தெரியும். கொதிப்போடு உள்ள தொண்டர்களை நாங்கள்  ஆசுவாசப்படுத்தி உள்ளோம். எடப்பாடி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூடுவதால் இந்த அராஜத்தை அரங்கேற்றி உள்ளனர். தனிநபர் தாக்குதலை எந்தவொரு மனசாட்சி உள்ள நபரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என பேசினார்.