“வயிற்றெரிச்சல் மனிதர்கள்”- செங்கோட்டையனை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்
ஒற்றுமை என்ற பெயரில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடலாம் என சிலர் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “அதிமுக - பாஜக கூட்டணியில் ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்திவிட முடியாதா என சிலர் நினைக்கிறார்கள்... இதனால் ஏற்பட்ட வேதனையில், ஒவ்வொரு அதிமுக தொண்டரும் நெருப்பில் விழுந்த புழுவாக துடிக்கிறார்கள். வயிற்றெரிச்சலாலும் இயலாமையாலும் சிலர் தங்களை தாங்களே தடம் மாற்றிக் கொண்டுள்ளனர். பழனிசாமியின் பயணத்திற்கு பேரலையாக மக்கள் வருவதை தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்கள். அத்தகைய வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தோல்வியை தரும். ஒற்றுமை என்ற பெயரில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடலாம் என சிலர் திட்டமிட்டுள்ளனர்.
மூத்த முன்னோர்கள் இப்படி செய்தால் சாதாரண தொண்டர்கள் எங்கே போக முடியும்? எடப்பாடியை அசைத்டுப் பார்க்கலாம் என கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள். அவரை மாற்றுவோம் இவரை மாற்றுவோம் என்று சொல்பவர்களை எல்லாம் மாற்றிவிட்டு எடப்பாடியார் ஒருவர் தான் முதலமைச்சர் என்ற தீர்ப்பை தர மக்கள் தயாராக உள்ளார்கள்” என்றார்.


