24 மணி நேரமும் ரேஷன்! 35 விநாடிகளில் 25 கிலோ தானியம் - 'அன்னபூர்த்தி' ஏடிஎம் வசதி..!

 
1

நம் நாட்டில் எங்கு வேண்டுமாலாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு முக்கிய முடிவை அரசு எடுத்துள்ளது.

மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இணைந்து ரேஷன் விநியோக முறையை நவீனப்படுத்தும் நோக்கில் டிஜிட்டல் நாணய முறையை (Digital Rupee) அறிமுகப்படுத்தியுள்ளன. குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்த முன்னோடித் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயனாளிகள் ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்திற்குப் பதிலாக டிஜிட்டல் ரூபாய் மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனைக்காகப் பயனாளிகளுக்குத் பிரத்யேகமான 'டிஜிட்டல் வாலெட்கள்' வழங்கப்படும். ரிசர்வ் வங்கியால் இந்த வாலெட்களில் டிஜிட்டல் ரூபாய்கள் வரவு வைக்கப்படும். பயனாளிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களின் அளவு மற்றும் விலையைப் பொறுத்து, QR குறியீடு அல்லது ஆதார் சார்ந்த OTP அமைப்பைப் பயன்படுத்திப் பணம் செலுத்தலாம். இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு முற்றிலுமாகக் குறைக்கப்பட்டு, அரசு வழங்கும் மானிய உதவிகள் நேரடியாகச் சென்றடைவது உறுதி செய்யப்படுகிறது.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தப்படும்போது, அந்தத் தொகை உடனடியாகச் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை டீலரின் கணக்கிற்குச் சென்றடையும். யார், எந்த நேரத்தில், எவ்வளவு பொருட்களைப் பெற்றுள்ளனர் என்ற விவரங்களை அரசு நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணிக்கும் வசதி இதில் உள்ளது. இது ரேஷன் பொருட்களைப் பதுக்குவதைத் தடுப்பதோடு, எடை போடுவதில் நடக்கும் மோசடிகளையும் முறியடிக்க உதவும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் விநியோகத்தை மேலும் எளிதாக்க 'அன்னபூர்த்தி' என்ற தானிய ஏடிஎம் இயந்திரங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண ஏடிஎம் இயந்திரங்களைப் போலவே செயல்படும் இவை, 24 மணி நேரமும் பொதுமக்களுக்குச் சேவை வழங்கும். இந்த இயந்திரங்கள் மூலம் வெறும் 35 வினாடிகளில் 25 கிலோ வரையிலான தானியங்களை எடுத்துக்கொள்ள முடியும். இதற்குப் பயனாளிகள் தங்களிடம் உள்ள டிஜிட்டல் கார்டை இயந்திரத்தில் ஸ்கேன் செய்து, கருவிழி அல்லது கைரேகைப் பதிவைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது அரிசி விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த இயந்திரங்கள் மூலம், வரும் மார்ச் மாதம் முதல் கோதுமை, பருப்பு, கொண்டைக்கடலை, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்சமயம் சில மாநிலங்களில் மட்டும் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தச் சேவை, விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், தங்களுக்குப் பிடித்த நேரத்தில் மக்கள் ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படும்.