ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு : நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்..!

 
ration shop

ஆயுதபூஜை போன்ற பண்டிகை நாள்களில் பொதுமக்களுக்குத் தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 20ஆம் தேதி சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது. அதன்படி, அக்டோபர் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல செயல்படும் என்று தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது.

ஆயுதபூஜை விடுமுறை சமயத்தில் இனிப்பு வகைகள் செய்வதற்கும் சமைப்பதற்கும் ஏதுவாக, முன்கூட்டியே ரேஷன் கடை களில் ஞாயிற்றுக் கிழமை ரேஷன் பொருட்களை வாங்க அரசு செய்துள்ள இந்த ஏற்பாடு ரேஷன் பயனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சொந்த ஊர் அல்லது வெளியூர் செல்லத் திட்டமிட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், ஞாயிற்றுக்கிழமை வேலைநாளை பயன்படுத்தி தங்களுக்குரிய பொருட்களை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளலாம்.

வேலை காரணமாக வார நாட்களில் ரேஷன் கடைக்கு செல்ல முடியாதவர்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எளிதாக வாங்கிக் கொள்ளலாம். ​