கால் எலும்பு தெரியும்வரை.. பிணவறையில் சடலத்தை கடித்த எலி! உச்சகட்ட பரபரப்பு
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட பிள்ளைதெரு பகுதியில் வசிப்பவர் ராஜ் என்கிற கோவிந்தராஜ். வயது 55. தேநீர் கடையில் வேலை பார்க்கும் இவருக்கு நேற்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் நேற்று மாலையே இறந்து விட்டார் என தெரிய வருகிறது. இந்நிலையில் அவரது உறவினர்கள் அவரது உடலை பெற்றுக் கொள்ள முன்வந்த போதும், மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை தராமல் பிரேத பரிசோதனை செய்து பிறகு தர முடியும் என கூறியுள்ளது. இதனையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை இறந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க வந்த நிலையில், இறந்து போனவரின் உடலில் பல பாகங்களில் எலி கடித்து குதிறிய நிலையில் காணப்படுகிறது. உடலின் பல பாகங்களிலும் எலும்புகள் வெளியே தெரிகின்றன. இறந்தவரின் முகம், தலை உள்ளிட பல இடங்களில் ரத்தம் வெளியேறி காணப்படுகிறது. வயிறு உப்பிய நிலையில் இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், இது குறித்து கேட்டபோது பிணவறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உறவினர்கள் பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவ கல்லூரி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் எவரும் வரவில்லை என கூறப்படுகிறது. இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இறந்தவர்களின் உறவினர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். இறந்தவரின் மரணத்தில் சந்தேகம் இல்லை எனக் கூறும் உறவினர்கள், அவரது உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் கடும் மனவேதனையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை இறந்த நிலையில் அவரது உடல் பிணைவறையில் உள்ள பதப்படுத்தும் பெட்டியில் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அங்கு எப்படி எலி வந்து உடலை கடித்து இருக்க முடியும் என இறந்தவரின் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நேற்றே உடலை தந்திருந்தால் நிம்மதியாக தந்தையின் உடலை அடக்கம் செய்திருக்க முடியும் என மன வேதனையுடன் கூறும் அவரது மகன், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால், இறந்து போன தந்தையின் உடல் இந்த அளவுக்கு மோசமாக இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும், தனது தந்தையின் உடலைப் போலவே பல பேரின் உடல்களும் இவ்வாறு தான் இருக்குமோ என்ற அச்சம் எழும்புவதாக கூறியுள்ளார்.

