"கைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி 250 கிட்னிகளை திமுகவினர் திருடி உள்ளனர்"- அண்ணாமலை பிரச்சாரம்
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கிட்னி திருடியவர்கள், அதற்கு உடந்தையானவர்கள் என அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ராசிபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக மதுரையில் இருந்து ராசிபுரத்திற்குதனி ஹெலிகாப்டரில் வந்த அண்ணாமலைக்கு, அத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டப மைதானத்தில் வேட்பாளர் பிரேம்குமார் மற்றும் மாவட்ட தலைவர் சரவணன், ராஜேஸ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து பிரச்சார வேன் மூலம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேட்பாளர் பிரேம்குமாருக்கு ஆதரவு திரட்டி பேசினார்.
அப்போது பேசிய அண்ணாமலை, “வருகிற மே 4-ஆம் தேதிக்கு பிறகு உறுதியாக தமிழகத்தில் மாற்றத்தை பார்க்க போகிறோம். திமுக வேண்டாம் என அனைத்து பகுதி மக்களும் நினைக்கிறார்கள். ராசிபுரம் பாஜக வேட்பாளர் பிரேம்குமார் படித்தது, வளர்ந்தது என அனைத்தையும் உதரிவிட்டு ஏழை மக்களுக்கு சேவையாற்றிட வந்துள்ளார். ராசிபுரம் தொகுதியானது அதிமுக, பாமக கோட்டை என்பதை முழுமையாக அறிவேன். இன்று நாம் அனைவரும் தோளோடு, தோளாக நிற்கும்போது வெற்றி உறுதி என்பது தெரிகிறது. பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியின் தூதுவராக பிரேம்குமார் வந்துள்ளார். இந்த கூட்டணியில் ஒரு உண்மையான ஜனநாயகம் உள்ளது. அடுத்த தலைமுறை கோரப்பிடியில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.
திமுக வேட்பாளர் மதிவேந்தன் கோபாலபுரத்தின் கொத்தடிமையாக வந்துள்ளார். இன்று ராசிபுரத்திற்கு இரவு 10 மணிக்கு மேல் பஸ் இல்லாத நிலை உள்ளது. நான் பள்ளிப்படிப்பை இங்கு தான் படித்தேன். எனவே இந்த ஊரின் கஷ்டத்தை அறிவேன். இந்த நிலையில் 8 கி.மீட்டர் தூரத்தில் பேருந்து நிலையத்தை கட்டி உள்ளனர். கமிஷனுக்காக தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து திமுகவினர் பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியில் கொண்டு போய்விட்டனர். இதற்கெல்லாம் ஆட்சி மாறினால் தான் விமோசனம் கிடைக்கும். கைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி 250 கிட்னிகளை திமுக நிர்வாகிகள் திருடி உள்ளனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கிட்னி திருடியவர்கள், உடந்தையானவர்கள் என அனைவரும் சிறைக்கு செல்வார்கள். ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா, நகர செயலாளர் சங்கர் என அனைவரும் ஒரே குட்டையில் விழுந்த மட்டையாக உள்ளனர். அனைத்திற்கும் உடந்தையாக அமைச்சர் மதிவேந்தன் உள்ளார். அவர் தொகுதி மக்களுக்கு எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அதிமுகவை முகமூடியாக போட்டுக்கொண்டு, தமிழகத்திற்குள் பாஜக வருவதாக கூறுகிறார்கள். நாங்கள் அனைவரும் ஒற்றை கருத்துடன் உள்ளோம். பாஜக வந்தால் குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியவை போகும். மேலும் பாஜக வந்தால் 100 நாள் வேலையை நிறுத்தி விடுவோம் என பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி 100 நாட்களை 125 நாட்களாக உயர்த்தி உள்ளார். ஒரு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்துவிட்டு, பெண்களுக்கு அரசியல் பிரநிதித்துவம் வழங்கியதாக கூறுகிறார்கள். 543-ல் இருந்து 800-க்கும் மேல் நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது பெண்களுக்கும் அதிக தொகுதிகள் கிடைக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 511 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து இருந்த நிலையில், 70 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளனர்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் 15 சதவீத வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றிவிட்டு, 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் 99 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் கூறுகிறார். ராசிபுரத்தில் சுற்றுலா தளங்கள் அமைப்போம், காவிரி - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம் என கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. முதல்வர் ஸ்டாலினிற்கும், விவசாயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தவுடன் பேருந்து நிலையம் மாற்று அரசு ஆணை ரத்து செய்யப்பட்டு, பழைய இடத்திலேயே பேருந்து நிலையம் செயல்பட நடவடிக்கை எடுப்போம். மேலும் மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்காக மத்திய கிழங்கு பயிர் ஆராய்ச்சி நிலைய கிளையை கொண்டு வருவோம். அதேபோல் பூ பயிரிடும் விவசாயிகளின் நலனிற்காக வாசன திரவிய தொழிற்சாலை, விசைத்தறியாளர்களுக்காக சேலம், ராசிபுரத்தை மையமாக வைத்து ஜவுளி பூங்கா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 67 ஆயிரம் விவசாயிகள் வருடம் 6 ஆயிரம் ரூபாய் நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசால் வழங்கப்படுவதோடு, 27 மக்கள் மருந்தகங்கள் மூலம் குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது” என்றார்.



