தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலை திறப்பு

 
tn

தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் பிறந்த நாளான இன்று (15.11.2023) தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் ரூ. 77.87 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

tn

தமிழகத்தின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

stalin

தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் காத்திட தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள். ஏறத்தாழ 30 ஆண்டு காலம் நகரமன்ற உறுப்பினராகவும், ஐந்து முறை நகரமன்றத் தலைவராகவும் இருந்த காலத்தில், ஜாதிமத பேதமின்றி அம்மாவட்ட அடித்தள மக்களின் அடிப்படைக் கல்வி மேம்பாடு, குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமை எதிர்ப்பு, கூட்டுறவு வங்கிக் கடனுதவி, சுகாதார மையங்கள், சனிக்கிழமைச் சந்தை, அங்காடிகள், பொதுவான கல்லறைத் தோட்டம் என நல்லபல திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்தவர். குறிப்பாக, 1927ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்தபோது, மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன், நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினைத் திறம்பட செயல்படுத்தி வெற்றி கண்ட அத்திட்டம் அம்மாநகர மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

தன்னலமற்ற தனது தியாகத்தினால், அம்மாவட்ட மக்களின் மனங்களில் இன்றும் உயர்ந்து நிற்கும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் நினைவினைப் போற்றிடும் வகையில், அன்னாரின் பிறந்த நாளான நவம்பர் 15 அன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கிணங்க, அன்னாரின் புகழுக்கு மென்மேலும் பெருமைச் சேர்க்கின்ற வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் பிறந்த நாளான இன்று தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள குவிமாடத்துடன் கூடிய அவரது திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.