தவெகவில் இணைகிறாரா நடிகை ரஞ்சனா நாச்சியார்?

பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில செயலாளராக இருந்து வந்தவர் ரஞ்சனா நாச்சியார், இவர் அரசு பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நிலையில் பிரபலமானார். மேலும் இவர் சின்னத்திரைகளிலும் நடித்துள்ளார். இவர் தற்போது பாஜகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சனா நாச்சியார், “பாஜகவில் இருந்து வெளியேற காரணங்கள் நிறைய இருக்கிறது. சிலவற்றை சொல்ல முடியும். சிலவற்றை சொல்ல முடியாது. சில காரணங்களில் முக்கியமானவற்றை தான் இந்த அறிக்கையில் எழுதியிருக்கிறேன். மற்றொரு மொழி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் பாஜக தரப்பு வாதம். மூன்றாவது மொழியாக ஹிந்தி என்று அவர்கள் கூறவில்லை. ஆனால், எல்லாப் பள்ளிகளிலும் அவரவர் விரும்பும் மொழிகளுக்கென்று தனிதனி ஆசிரியர்கள் இருப்பதில்லை. நிச்சயமாக இந்தி ஆசிரியர்தான் இருப்பார்கள். எனவே, இந்தியை மூன்றாவது மொழியாக எடுக்க நாம் நிர்பந்திக்கப்படுவோம். திணிக்கப்படுவோம்.பாஜக அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துவதைப் போலுள்ளது. தமிழகத்திற்கு நிதி கொடுக்க மாட்டேன் என்பதை ஆணவமாகவே பார்க்கிறேன்.” என்று தெரிவித்தார்.
மேலும், பாஜகவில் இருந்து திடீரென விலகிய அவர், அடுத்தது விஜயின் தவெகவில் இணையப்போகிறீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு... அவசரம் வேண்டாம்... மாற்றுக் கட்சியில் இணைவது குறித்து இரண்டு, மூன்று தினங்களில் அறிவிப்பேன் என்றார்.