போஸ்டரில் அமித்ஷாக்கு பதில் நடிகர் சந்தானபாரதி புகைப்படம் - அருள்மொழி விளக்கம்!

ராணிப்பேட்டையில் அமித் ஷா வருகையையொட்டி பாஜக சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் அமித்ஷாக்கு பதில் நடிகர் சந்தானபாரதி போஸ்டர் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். இதில் தொழில் பாதுகாப்புப் படை தின அணிவகுப்பு மரியாதையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்றுக் கொண்டார். இதனிடையே அமித் ஷா வருகையையொட்டி பாஜக சார்பில் ராணிப்பேட்டை பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அமித்ஷாக்கு பதில் நடிகர் சந்தானபாரதி போஸ்டர் ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த போஸ்டரில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில், அமித்ஷாக்கு பதில் சந்தானபாரதி போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: அந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதை நான் ஒட்டவில்லை, என் பெயரை Misuse செய்துள்ளனர். இதனால் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன். காவல்துறையை அணுகி புகார் கொடுக்க இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.