குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 நிதியுதவி 13,000 பேருக்கு வழங்கப்பட்டது- ரங்கசாமி

 
rangasamy

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 நிதியுதவி 13 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 23 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் கொடுக்கப்பட உள்ளதாக புதுச்சேரி  சட்டபேரவையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

rangasamy

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசும் போது,  புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டு பல திட்டங்களை கொண்டு வந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு, புதுச்சேரி ஆளுநர் உதவியோடு வளர்ச்சியை நோக்கி செல்கிறோம். எந்த ஆலையும் இயக்கக் கூடிய நிலையில இல்லை. ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை கொடுத்துவிட்டு ஆலைகளை வேறு நிலையில் என்ன செய்ய முடியும் என யோசித்து செயல்படுத்தும் நிலையில் அரசு இருக்கிறது. 

கூட்டுறவு சர்க்கரை ஆலையும் நலிந்துவிட்ட நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கிறோம். அவர்களுக்கு ரூ. 44 கோடி கொடுத்துள்ளோம். எந்த பயனும் இல்லாமல் ஊதியம் கொடுக்கிறோம். கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் எண்ணை நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது. எனவே அதனை தனியாருக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பணியிடங்களை விரைவாக நிரப்பி வருகிறோம். ஏப்ரல் மாதத்தில் எல்.டி.சி, யூ.சி.டி தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். 

கூட்டுறவு நிறுவனங்களை உயர்த்த ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாண்லேவில் பால் தட்டுப்பாடு இல்லாமல் சீரான நிலை இருந்து கொண்டிருக்கிறது.  இதேபோல் மற்ற துறைகளிலும் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இன்னும் ஓரிரு வாரத்தில் மாணவர்களுக்கான சைக்கிள், சீருடை, லேப்டாப் கொடுக்கப்படும். சென்டாக் நிதி உதவியும் கொடுக்கப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 நிதியுதவி 13 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 23 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் கொடுக்கப்படும் என என்றார்.