ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம்..

 
மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை அடுத்து, கண்டனம் தெரிவித்து மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் அதிமுக, பாமக, நாதக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. 

மீனவர்கள்

இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்  300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.  தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை , எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து, அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க  வலியுறுத்தியும், கடலில் மூழ்கி மாயாஅன 2 மீனவர்களை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (புதன்கிழமை ) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.