வரும் 28 முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்- ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

இலங்கையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள், வரும் 28ஆம் தேதியிலிருந்து தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 22ம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஐந்து விசைப்படகையும் அதிலிருந்து 32 மீனவர்களை கைது செய்து மார்ச் 7-ஆம் தேதி வரை வவுனியா சிறையில் அடைத்துள்ளது.
இதனை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. போராட்டத்தின் காரணமாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நங்கூரம் போட்டு நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சி மடத்தில் அனைத்து மீனவர்கள் சங்கம் சார்பில் அவசர கூட்டம் நடைபெற்றது. ட்டத்தில் தமிழக மீனவர்களின் வாழ்வாதார போராட்டம் சுமார் 42 வருடமாக நடைபெற்று வருகிறது. இலங்கை அரசின் அத்துமீறிய செயல்பாடுகள் நிரந்தரமாக நிறுத்தப்பட மத்திய அரசு வழிவகை செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல் மூலம் படகுகள் சிறைபிடிப்பு மீனவர்கள் கைது நடவடிக்கை நீதிமன்ற தீர்ப்பு மூலம் மீனவர்களுக்கு வழங்கப்படும் மாதக்கணக்கில் சிறை தண்டனை பல லட்சம் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும். இலங்கை அரசால் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட விசைபடகுகளை மத்திய அரசு மீட்டுக் கொடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வருகிற வெள்ளிக்கிழமை தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்தனர்.