மண்டபம் பகுதியில் 3வது நாளாக வீடுகளை சூழ்ந்த வெள்ளம்!
மண்டபம் பகுதியில் 3வது நாளாக 200க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ராமநாதபுரத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. மேகவெடிப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் 41 சென்டி மீட்டர் அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது. பாம்பனில் 19 சென்டி மீட்டர் மழை பொழிவால் வெள்ளக்காடாக மாறியது. ராமநாதபுரம் பேருந்து நிலையம் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளித்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். மண்டபம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இந்த நிலையில், மண்டபம் பகுதியில் 3வது நாளாக 200க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மோட்டார் பம்ப் மூலம் பேரூராட்சி நிர்வாகம் மழைநீரை வெளியேற்றி வருகிறது. மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டாலும் குறையாமல் உள்ளது. தேங்கிய மழைநீரில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வீடுகளை நீர் சூழ்ந்ததால் உறக்கமின்றி தவிக்கும் மண்டபம் பகுதி மக்கள், அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.