ராமதாஸ் தரப்புக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு..!

 
ramadoss

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) களம் காண்கிறது.

அன்புமணி ராமதாஸ் உடனான மோதலுக்கு பின்னர், பாமக இரண்டு பிரிவாக உடைந்திருக்கிறது. அன்புமணி தலைமையிலான பாமக தற்போது அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறது. இக்கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சி, அதன் தேர்தல் வரலாற்றில் 20 தொகுதிகளுக்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும். இப்படி இருக்கையில், தருமபுரி, பென்னகரம் உள்ளிட்ட 30 தொகுதிகளில் களமிறங்கயிருக்கும் ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 

எனவே தங்கள் கட்சியின் சார்பில் களம் காணும் 30 வேட்பாளர்களுக்கும் சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது குறித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு ஆகிய எனது ஆதரவு பெற்று மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மேற்கண்ட வேட்பாளர்களுக்கு வருகின்ற 2026 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்வதற்கு 23.04.2026 அன்று நடைபெற உள்ள தேர்தலில் மேலே உள்ள 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.