கடைகளில் தமிழில் பெயர் பலகை வைத்தால் பூங்கொத்து கொடுத்து பாராட்டுவேன் - ராமதாஸ்

 
ramadoss

தமிழகத்தில் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைத்தால் பூங்கொத்து கொடுத்து பாராட்டுவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உழவர்கள் இல்லா விட்டால் இந்த உலகம் பசியாற முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை வணிகர்கள் இல்லாமல் வாழ்க்கை நடத்த இயலாது, என்பதும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று தான் முழங்கினோம். ஆனால், எங்குமே தமிழ் இல்லை என்பது தான் கசக்கும் உண்மை. எங்கும் தமிழ் இல்லை என்பதை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திருப்பவை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெயர்ப் பலகைகள் தான். சென்னையில் ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகள் மின்னுகின்றன. ஆனால், தனித்தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும் தான் என்றில்லை... தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் அழகுத் தமிழுக்கு மாற்றாக அரைகுறை ஆங்கிலத்தில் தான் காட்சியளிக்கின்றன. அக்காட்சியை காண மனம் பொறுக்கவில்லை.  

ramadoss

விழிப்புணர்வு பெற்ற வணிகப் பெருமக்களே, அதிக அளவாக அடுத்த ஒரு மாதத்திற்குள் உங்கள் கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் மாற்றி எழுதுங்கள். பெயர்ப்பலகைகள் தொடர்பாக 1948-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந் தேதி 575 எண் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையின் முக்கியக் கூறுகள் வருமாறு:- எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்.  பெயர்ப் பலகைகளில் பிற மொழிகளைப் பயன்படுத்தும் போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற அளவில் இருக்க வேண்டும். பெயர்ப் பலகையில் உள்ள எழுத்துக்கள் சீர்திருத்த வரி வடிவில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட வரையறைக்கு உட்பட்டு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அமைக்கும்படி வணிகப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வெளிநாடுகளில் தமிழ் வளர்த்த உங்களால் உள் நாட்டில் தமிழ் வளர்க்க கண்டிப்பாக இயலும். அவ்வாறு தமிழில் பெயர்ப் பலகை அமைக்கும் வணிகர்களுக்கு மலர்க்கொத்து கொடுத்து பாராட்டுவதற்கு நான் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.