நீட் பயிற்சியை 11ஆம் வகுப்பு முதல் தொடங்க வேண்டும்- ராமதாஸ்

 
 ராமதாஸ்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சியை 11- ஆம் வகுப்பு முதல் தொடங்க வேண்டும் என பாமக நிறுவ்னர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத விரும்பும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்த பயனும் விளையாத நிலையில், நடப்பாண்டிலாவது பயிற்சியை முன்கூட்டியே தொடங்குவது தான் சரியான செயலாக இருக்கும்.

சமூகநீதிக்கு எதிரான நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; 12&ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. எனினும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்களில் நீட் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத அரசு பள்ளிகளின் மாணவர்கள் வெற்றி பெறுவதை  உறுதி செய்வது தான் அரசின் கடமை ஆகும். அந்த கடமையை நிறைவேற்றுவது கடந்த காலங்களில்  இருந்ததை விட, இப்போது சவாலானதாக மாறியிருக்கிறது என்பது தான் ஆய்வுகள் சொல்லும் உண்மை.

நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வது கடினமானதாக மாறியுள்ளது. நடப்பாண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.50% ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களைத் தவிர, பொதுப்பிரிவில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட சேரவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.50% ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தவர்களில் கூட 20% மாணவர்கள் மட்டும் தான் முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள். மீதமுள்ள 80% மாணவர்கள் அரசு பள்ளிகளில் 12&ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனியார் பயிற்சி மையங்களில் சிறப்பு பயிற்சி பெற்ற பிறகே நீட் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

ராமதாஸ்

அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கும் மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 7.50% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த  இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்றாலும் கூட தனியார் பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது நல்வாய்ப்புக்கேடானது ஆகும். இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே தீர்வு, தனியார் பயிற்சி மையங்களில் அளிப்பதை விட தரமான  பயிற்சியை தமிழக அரசு பள்ளிகளில் வழங்குவது தான். ஆனால், தவிர்க்கவே முடியாத இந்தத் தீர்வை செயல்படுத்த வேண்டியதன் தேவையை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உணர்ந்ததாக தெரியவில்லை.

அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலில் தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஆன்லைனில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடியாக சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின் 2021&22ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு  ஹைடெக் ஆய்வகங்களிலும், 15 மாதிரி பள்ளிகளில் எலைட் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேற்கண்ட இரு வகை பயிற்சிகளிலும் பல குறைபாடுகள் இருந்தன என்பதை எவரும், எங்கும், எப்போதும் மறுக்க முடியாது. இந்தக் குறைகளை களையும் வகையில் கடந்த ஆண்டு வட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் 415 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, அவற்றில் மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்தமாக 14 நாட்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டதால் அதுவும் பயனளிக்கவில்லை.

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் வசதி படைத்த மாணவர்கள் குறைந்தது  இரு ஆண்டுகள் முதல் நான்கு ஆண்டுகள் வரை தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர்.  அந்தப் பயிற்சிக்குப் பிறகு முதல் முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால், மீண்டும் ஓரிரு ஆண்டுகள் பயிற்சி பெறுகின்றனர். இவ்வாறாக நீட் தேர்வில் வெற்றி பெற பலரும் 6 ஆண்டுகள் வரை பயிற்சி பெற வேண்டியிருக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 14 நாட்கள் பயிற்சி கொடுப்பது எந்த வகையில் போதுமானதாக இருக்கும். அதனால் தான் அரசு பள்ளி மாணவர்களால் பொதுப்பிரிவு இடங்களில் தகுதி பெற முடியவில்லை என்பதுடன், 7.50% ஒதுக்கீட்டிலும் 80% இடங்களை தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கிறது.

 ராமதாஸ்..

நீட் விலக்கு பெறும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீண்ட காலம் பயிற்சி அளிக்க வேண்டியதன்  தேவையை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். 12&ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை வாரத்தில் ஒரு நாள் பெயரளவில் பயிற்சி அளிக்கும் முறையை கைவிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தது இரு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுவதை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். அதற்காக 11&ஆம் வகுப்பு தொடங்கிய வாரம் முதல், 12&ஆம் வகுப்பு தேர்வு முடிந்து நீட் தொடங்குவதற்கு முந்தைய வாரம் வரை இரு ஆண்டுகளுக்கு முழுமையான பயிற்சியை திறமையான ஆசிரியர்கள், வல்லுனர்களைக் கொண்டு அரசு வழங்க வேண்டும்.

கடந்த ஆண்டில் வட்டத்திற்கு ஒரு மையத்தில் மட்டுமே நீட் பயிற்சி வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் வட்டத்திற்கு இரு மையங்களில் பயிற்சி வழங்கப்பட வேண்டும். பயிற்சியில் சேர விருப்பமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு கையேடு மற்றும் வினா - விடை தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும். நடப்பாண்டிற்கான பயிற்சி வகுப்புகளை அடுத்த வாரத்திலேயே தொடங்குவதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.