தைலாபுரத்தில் நவ.4ம் நாள் இசக்கி படையாட்சியாரின் படத்திறப்பு- ராமதாஸ்

தைலாபுரத்தில் நவம்பர் 4-ஆம் நாள் இசக்கி படையாட்சியாரின் படத்திறப்பு நடைபெறவுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக பணியாற்றி மறைந்த இசக்கி படையாட்சியார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவரது திருவுருவப் படத்திறப்பு விழா பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படவிருக்கிறது. தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் வரும் நவம்பர் 4&ஆம் நாள் காலை 10.30 மணிக்கு இவ்விழா நடைபெறவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவை தொடங்குவதற்கு முன்பே எனக்கு அறிமுகமான இசக்கி படையாட்சியார் தொடக்கம் முதல் இறுதி வரை எனது நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். பாட்டாளி மக்கள் கட்சியில் பொருளாளர், இணைப்பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், வன்னியர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளையும் திறம்பட கையாண்டவர்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் கட்சியை வளர்ப்பதற்காக கடுமையாக உழைத்தவர். 1989, 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் என்னுடன் இணைந்து முக்கியப் பங்காற்றியவர். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் தங்கி கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்தவர். தமிழ்நாட்டில் எனக்கு அடுத்தபடியாக அவர் போகாத கிராமங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஏராளமான கிராமங்களுக்கு சென்று கட்சிப் பணியாற்றியவர். கட்சிப் பணிகளை நிறைவேற்றித் தருவதில் எனக்குத் தளபதிகளாக விளங்கும் சிலரில் இசக்கிப் படையாட்சி முக்கியமானவர். பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் அனைவருடனும் அன்புடன் பழகியவர்.
இசக்கி படையாட்சியார் அவர்களின் உழைப்பையும், சேவையையும் நினைவு கூறும் வகையில் அவரது திருவுருவப் படத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நான் கலந்து கொண்டு இசக்கி படையாட்சியாரின் உருவப்படத்தை திறந்து வைக்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பா.ம.க. அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவர் பேராசிரியர் தீரன், சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் பேராசிரியர் ச.சிவப்பிரகாசம், பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர் படத்திறப்பு விழாவில் பங்கேற்று இசக்கி படையாட்சியார் ஆற்றிய கட்சிப் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றுவர்.
புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பாளர் கோ.கணபதி வரவேற்புரையாற்றுவார். விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் ஜெயராஜ் நன்றியுரையாற்றுகிறார். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு அமைப்புகள், துணை அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும் இசக்கிப் படையாட்சியாரின் படத்திறப்பு விழாவில் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.