சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? - திமுக அரசுக்கு ராமதாஸ் சரமாரி கேள்வி
சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை திருவொற்றியூரில் பழக்கடை நடத்தி வந்த கவுரி என்ற பெண் வணிகர் மாமூல் தர மறுத்ததால் அவரை பர்மா சேகர் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்திருக்கிறார். அதைத் தடுக்க முயன்ற கவுரியின் கணவர் மாரியும் கத்திக்குத்துக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்த படுகொலையும், கொலை முயற்சியும் கண்டிக்கத்தக்கவை. அதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆறுமுகம் என்பவர் நடத்தி வந்த இனிப்புக்கடையை திமுகவைச் சேர்ந்த நகராட்சி உறுப்பினர் காசி பாண்டியன் என்பவர் தலைமையிலான கும்பல் தாக்கி சூறையாடியுள்ளது. சென்னை, மதுரை என தமிழ்நாடு முழுவதும் வணிகர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவது கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் என்பது தான் எழுதப்படாத வரலாறாக உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் தான் சென்னையில் பெண் வணிகர் வெட்டிக்கொல்லப்பட்ட நிகழ்வும், மதுரை திருமங்கலத்தில் திமுக நகராட்சி உறுப்பினரால் கடை சூறையாடப்பட்ட நிகழ்வும் அரங்கேறியுள்ளன. இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டியது தான் காவல்துறையின் பணியாகும். ஆனால், காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை விட திமுகவினரும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் செய்யும் குற்றங்களை மூடி மறைப்பதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. ஒரு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படாவிட்டால், அந்த மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. தமிழ்நாட்டையும் அப்படி ஒரு மோசமான நிலைக்கு திராவிட மாடல் அரசு தள்ளிவிடக்கூடாது. தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்; அதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.