அனைத்து மகளிருக்கும் பாமக சார்பில் மகளிர் நாள் வாழ்த்துக்கள் - ராமதாஸ்

 
ramadoss

அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகின் ஆக்கும் சக்தியாகவும். காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8-ம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும்.  ஒரு காலத்தில் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்த பெண்களுக்கு இப்போது ஓரளவு உரிமைகளும், விடுதலையும் கிடைத்திருந்தாலும் கூட இன்னும் பாதுகாப்பு கிடைக்கவில்லை. 21-ம் நூற்றாண்டு பிறந்து, கால் நூற்றாண்டாகியும் பெண்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.

Ramadoss


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதற்கு புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தான் வலி மிகுந்த எடுத்துக்காட்டு. ஆணுக்கு இணையாக பெண்கள் முன்னேற வேண்டும்; சாதனைகளை படைக்க வேண்டும் என்பன தான் நமது உயர்ந்த நோக்கங்கள். அந்த நோக்கங்கள் எட்டப்பட வேண்டும் என்றால் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே, உலகம் முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் பாதுகாப்பாக நடமாட வேண்டும். அதற்கான சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க உலக மகளிர் நாளான இந்த நன்நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.