அதலபாதாளத்தில் தமிழக காவல்துறை...முதலமைச்சரின் திறனின்மையே காரணம் - ராமதாஸ் விமர்சனம்!
தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அதலபாதாளத்திற்கு சென்று விட்டன எனவும், முதலமைச்சரின் திறனின்மையே இதற்கு காரணம் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு காவல்துறை ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக போற்றப்பட்டது. ஆனால், இப்போது தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கி விட்டன. தமிழ்நாட்டை உலுக்கிய பல வழக்குகளில் இன்று வரை துப்பு துலக்கப்படவில்லை. காவல்துறையின் புலனாய்வுத் திறன் மழுங்கி விட்டது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு.
வேங்கைவயலில் பட்டியலினத்தவரின் பயன்பாட்டுக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்டு இரு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால், அந்த வழக்கில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை; பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.