ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக - ராமதாஸ்..

 
ramadoss

ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த  15-ஆம் நாள் முதல்  சென்னை சைதாப்பேட்டையில் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் தொடரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட தமிழ்நாடு அரசு முன்வராதது  கண்டிக்கத்தக்கது ஆகும்.

ஊராட்சி மன்ற அலுவலகம்

ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும், காலநிலை ஊதியம் வழங்கவேண்டும்,  மூன்று ஆண்டுக்கு ஒருமுறை வட்டாரத்திற்குள் பணி மாறுதல் வழங்கவேண்டும்,  கருவூலம் மூலம் ஊதியம் வழங்குவதுடன்,   ஒய்வூதியமும் வழங்கவேண்டும் என்பன தான் ஊராட்சி செயலாளர்களின்கோரிக்கைகள் ஆகும்.  இவை அனைத்தும் ஊராட்சி செயலாளர்களின் பணிப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவை சார்ந்தவையாகும்.  ஊராட்சி செயலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவற்றை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டக்கூடாது!

தமிழக அரசு

கிராமப்பகுதிகளில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப்பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்பவர்கள்  ஊராட்சி செயலாளர்கள் தான். ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு. ஊராட்சி செயலாளர்களின் போராட்டத்தால்  கிராமங்களில் மேற்கண்ட பணிகள் பாதிக்கப்படும். இதையும், அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தையும் கருத்தில் கொண்டு,  ஊராட்சி செயலாளர்களுடன் பேச்சு நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அரசு முன்வர வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.